Thursday, September 29, 2011

22 - கிரகாம் தெரு


22 ஆம் எண் பேருந்து கிரகாம் தெரு வழியாக டௌன்டவுன் (டவுன்) செல்லும் வண்டி. அனேக நேரங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பயணிக்கும் இந்த பேருந்தில் அலுவலக நேரங்களில் மற்றொரு கூட்டமும் பயணிப்பது உண்டு - ஆப்பிரிக்காவில் இருந்து வந்து மெருகு ஏறிய இந்தியர்கள், மெருகு ஏற மறுக்கும் இந்தியர்கள். இப்பேருந்தின் பெயர்தான் லோக்கல் ஆனால் நம்ம ஊர் சொகுசு பேருந்துக்கு மேலான பொருத்தங்கள். குஷன் இருக்கை, குளிர் சாதனம், தானியங்கி கதவுகள், குதிக்கும் ஓட்டுனர் இருக்கை, நோட்டமிடும் படபிடிப்பான்கள், அறிவிப்பான் என ஏக பொருத்தங்கள்.

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் சொந்த வண்டி இல்லாத காரணத்தால் மட்டுமே பயன்படுத்தும் போக்குவரத்து இது. அதில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் பயணிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. வியப்பு இதில் கணிசமான அளவு கூட வெள்ளையர்கள் இல்லையே என்பதுதான். இதை அடிமைத்தனத்தின் அழியா சுவடு என்றுதான் சொல்லவேண்டும். இந்த பயணத்தை விட்டொழிக்கும்படி இவர்கள் முன்னேற காலம் உதவலாம், ஆனால இந்த பேருந்தை நிரப்ப இன்னொரு கூட்டம் உருவாக்கப்படும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

கணிசமான வருமானம் ஈட்டும் கணினி பொறியியலாளர்களாக பணியாற்றிடும் இந்தியர்களுக்கு இந்த பேருந்தில் என்ன வேலை என்ற கேள்வி எழும். வண்டி ஓட்டத் தெரியாதவன், ஓட்ட இயலாதவன், கார் வாங்க விருப்பமில்லாதவன், மிகுதியாக அலுவலர்கள் பயணிக்கும் விரைவு பேருந்தை தினமும் தவற விடுபவன் என பலதரப்பட்ட இந்தியர்கள் இதில் பயணிப்பதுண்டு. இது லோக்கல் என்று அழைக்கபடுவதற்கு காரணம் வெறும் 10 மைல் தொலைவை கால் மைலுக்கு ஒரு நிறுத்தம் என்ற கணக்கில் 40 வினாடிகள் எடுத்துக் கொள்வதுதான். நீங்கள் யூகித்தது போல் இப் பேருந்தை இயக்கும் அனேக ஓட்டுனர்களும் ஆப்ரிக்க அமெரிக்கர்களே. இனம் இனத்தோடு சேரும் என்ற சொல் மெய்யே.


நம் ஊர் பேருந்துகளை போலவே சரியான சில்லறை கொண்டுவர வேண்டும். இல்லையேல் நடத்துனரை நச்சரித்து சில்லறை வாங்க இயலாது இந்த ஊரில். சரி வாகன நடத்துனரும் கருப்பரா? இல்லை. அவர் மூன்று அடி மட்டுமே உள்ள, நாடியற்ற, மூச்சற்ற தானியங்கி இயந்திரம். சிட்டி போன்ற நடக்கும், பறக்கும் திறன் கிடையாது. ஆனால் வசூல் ராஜா பாணியில் சரியாக பைசா வசூல் செய்யும் திறமை உடையது. டாலர் நோட்டை திணிக்க ஒரு பகுதி, சில்லறை காசுகளை கொட்ட ஒரு பகுதி, மாதாந்திர அனுமதி அட்டையை திணிக்க ஒரு பகுதி என ஏக ஏற்பாடு.


பயணம் தொடரும்.....

No comments:

Post a Comment